vanathivasi

வாசி’ வானதி: “வனம் சுமக்கும் ஒரு பறவை” – இயற்கை சூழலில் சிறப்பு குழந்தைகளுக்காக ஒரு பள்ளி #iamthechange

Be the Change என்றார் காந்தி. I am the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்பாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 18வது அத்தியாயம் இது.)

வானதி சிறப்பு குழந்தைகளுக்காக ஏறத்தாழ ஒரு தசாப்தமாக வேலை செய்கிறார். திருச்சியில் சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியராக பணியைத் தொடங்கிய வானதி, இப்போது திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கென்றே ஒரு பிரத்தியேக மையத்தைத் தொடங்கி இருக்கிறார்.

சிறப்புக் குழந்தைகளின் உலகம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடுதான்
வானதியின் சொந்த ஊர். இளம் வயதில் இவர் பார்த்த ஒரு சம்பவம்தான் வானதியின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது.

“சிறப்புக் குழந்தைகள், அவர்களது செயல்பாடு குறித்தெல்லாம் எனக்கு அப்போது எந்த புரிதலும் கிடையாது. எல்லோருக்கும் சிறப்புக் குழந்தைகள் குறித்து ஒரு பார்வை இருக்கும்தானே? எனக்கு அப்படிதான் இருந்தது. எந்த புரிதலும் இல்லை. சிறுவயதில் நான் பார்த்த ஒரு காட்சி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது,” என்கிறார் வானதி.

என் பக்கத்து வீட்டிலிருந்த ஒரு குழந்தை சுவரை, கண்ணாடியை தன் தலையால் எப்போதும் முட்டிக் கொண்டே இருக்கும். நாங்கள் ஏதாவது சொன்னால் அதற்குப் பதில் அளிக்க மாட்டாள். ஏன் இப்படி இருக்கிறாள், அவளுக்கு என்ன பிரச்சனை எனத் தேடிய போதுதான் சிறப்புக் குழந்தைகள் குறித்துத் தெரிந்தது. பின் அவர்கள் குறித்துப் படிக்கத் தொடங்கினேன்,” என்று கூறுகிறார்.

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் புனர்வாழ்வியல் துறையில் சிறப்புக் குழந்தைகளுக்கென்று இருக்கிற கல்வியை முடித்திருக்கிறார்.

பின்பு, திருச்சி, தஞ்சாவூர் எனப் பல மாவட்டங்களில் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் பணியாற்றி இருக்கிறார்.

“சிறப்புக் குழந்தைகளுக்குக் கற்பிப்பது சுலபம்தான். நம் பார்வையிலேயே உலகத்தை அணுகாமல், அவர்களைப் புரிந்து கொண்டு, அவர்களின் தனி உலகில் ஊடுருவி, அவர்களுடன் உரையாடினாலே போது அவர்கள் அனைத்தையும் புரிந்து கொள்வார்கள்,” என்கிறார்.

வானதி ‘வாசி’ வானதி ஆனது எப்படி?

சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் சிவசைலத்திலுள்ள சிறப்புப் பள்ளி ஆசிரியருக்குப் பயிற்சியளிக்க வந்த அவருக்கு, இந்த பகுதியின் இயற்கை சூழல் பிடித்துப் போனதால் இங்கே தங்கி வாசி எனும் சிறப்புப் பள்ளியைத் தொடங்கி இருக்கிறார்.

‘வாசி’ என்றால் உயிர்க்காற்று என்று சொல்லும் வானதி, “நமது காயங்கள் அனைத்தையும் ஆற்றுப்படுத்தும் ஆற்றல் படைத்தது இயற்கை. இயற்கையான சூழலிருந்தாலே ஒரு அமைதி கிடைக்கும். அந்த அமைதிதான் சிறப்புக் குழந்தைகளுக்குத் தேவை. அதற்காகத்தான் இங்கு வாசி சிறப்பு மையத்தைத் தொடங்கினேன்” என்று கூறுகிறார்.

இடம் மட்டும் அல்ல, கல்வியும் அப்படி இருக்க வேண்டும் என்கிறார் வானதி.

அவர், “சிறப்புக் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான கல்வி தேவை என்பதிலேயே இங்குப் பெரிதாகப் புரிதல் இல்லை. உண்மையில் சிறப்புக் குழந்தைகள் என்ன சொல்ல வேண்டும்? மனப்பாடம் செய்து ஏ,பி,சி,டி சொல்ல வேண்டுமா? அல்லது தங்களது தேவைகளைக் கேட்கும் திறன் வேண்டுமா? தங்களுக்குப் பசியை, வலியைச் சொல்ல கற்றுத் தர வேண்டும். அதனைத்தான் நாங்கள் முதன்மையாக எடுத்துச் செய்கிறோம்” என்கிறார்.

இங்கு வகுப்பறைகள் என்று ஏதும் இல்லை. மரங்கள், பறவைகள், பூச்சிகள் எல்லாம் ஆசான்தான். அதனுடன் குழந்தைகளுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்தித் தரும் வேலையைத்தான் தான் செய்கிறேன் என்று கூறுகிறார் அவர்.

உணவுக் காடு: விவசாயம் வெற்றிகரமான தொழில்தான் – சாதித்த சரோஜாவின் கதை
கொத்தடிமையாக இருந்து மீண்டு அமெரிக்கா வரை சென்ற பச்சையம்மாள் – நம்பிக்கை பகிர்வு
மனிதக் கழிவுகளை உரமாக்குவது எப்படி

அறம் எனப்படுவது யாதெனில்’
“ஒவ்வொரு செயலுக்கும் ஓர் அறம் வகுக்கப்பட்டிருக்கும் தானே? நான் என் செயலுக்கு வகுத்துக் கொண்ட அறம் சிறப்புக் குழந்தைகளை எக்காரணம் கொண்டும் தேக்கிவிடக் கூடாது என்பதுதான்,” என்று கூறுகிறார்.

இது குறித்து விவரிக்கும் வானதி, “சிறப்புக் குழந்தைகள் தனித்து இயங்குவதற்கான ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும். நாளை அவர்கள் பெற்றோர் இல்லாமல் போகலாம், ஏன் நான் கூட இல்லாமல் போகலாம். ஆனால், அதெல்லாம் அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது. அவர்கள் தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொண்டு தனித்து வாழ வேண்டும். அதற்கான பயிற்சியைத்தான் எப்போதும் நான் முதன்மையாக கற்றுத் தருகிறேன். விதைக்க, சமைக்க, கைவினை பொருட்கள் செய்ய கற்றுத் தருகிறேன்,” என்கிறார்.

வாசி பயிற்சி மையம் ஜனவரி மாதத்திலிருந்துதான் முழுநேர உண்டு உறைவிடப் பள்ளியாக மாற இருக்கிறது. இப்போது காலை முதல் மாலை வரை இயங்கும் சிறப்பு மையமாகச் செயல்படுகிறது.

சில உள்கட்டமைப்பு பணிகளை முடிக்க வேண்டி இருக்கிறது. அதனை முடித்துவிட்டால் பள்ளி முழுமை அடைந்துவிடும் என்கிறார்.

விதையை விழுங்கிய ஒவ்வொரு பறவையும் ஒரு வனத்தையே சுமந்து திரிகிறது. அப்படியான ஒரு பறவையாக இருக்க விரும்புகிறேன் என்று கூறுகிறார் வானதி.

 1. வாசி வாழ்வியல் மையம்.
  2/525
  வடமலைசமுத்திரம் ரோடு,
  கருத்தபிள்ளையூர் to பாபநாசம்
  அம்பாசமுத்திரம்
  திருநெல்வேலி 627418

தொடர்பு எண். 9677853412

Related posts

Leave a Comment