மத்திய அரசின் முடிவுக்கு ராகுல் நன்றி!

புதுடில்லி : கொரோனா வைரஸால் தேக்கமடைந்துள்ள பொருளாதார நிலையை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களை, வெளிநாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்தாமல் இருப்பதற்காக, இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துள்ள நாடுகள், அந்நிய நேரடி முதலீடுகளை அரசு மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது. மத்திய அரசின் இம்முடிவிற்கு ராகுல் நன்றி தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்பாக இன்று (ஏப்., 18) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் நிலைமையை பயன்படுத்தி நிறுவனங்களை கையகப்படுத்துவதை தடுக்க அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையில் திருத்தம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துள்ள நாட்டின் நிறுவனமோ அல்லது தனிநபரோ இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், அரசின் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும் என விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னர் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்கு மட்டும் இருந்த இவ்விதியை, ‘எல்லையை பகிர்ந்துள்ள அனைத்து நாடுகளுக்கும்’ என மாற்றியுள்ளனர். இதன் மூலம் சீன நிறுவனங்களும் புதிய விதிமுறையின் கீழ் வருகிறது. இது சீனாவில் இருந்து வரும் அந்நிய முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏப்ரல் 2000 முதல் டிசம்பர் 2019 வரை சீனா 2.34 பில்லியன் டாலர்களை இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடாக செய்துள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா, பூட்டான், நேபாள், மியான்மர் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துள்ளன.
இவ்வறிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் , “தனது எச்சரிக்கையை கருத்தில் கொண்டு அந்நிய நேரடி முதலீட்டு விதிகளில் திருத்தம் செய்து, குறிப்பிட்ட விஷயங்களில் அரசு ஒப்புதலை கட்டாயமாக்கியதற்கு நன்றி.” என கூறியுள்ளார். மேலும், ஏப்ரல் 12-ம் தேதி, “கொரோனா பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்தும் வெளிநாட்டு முயற்சிகளை, மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது” என தான் கூறியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

Leave a Comment