அடி இல்லை மிரட்டல் இல்லை; அன்பால் சாதிக்கும் எஸ்.ஐ.,

காரியாபட்டி: மனித வாழ்வையே புரட்டிப்போட்ட கொரோனா எந்தெந்த வழிகளிலெல்லாம் பரவுகிறது என்ற அச்சத்திலும் அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்க வீதிகளில் நடமாடுவதை மக்கள் குறைப்பதாக தெரியவில்லை. டூவீலர்களில் சுற்றி திரிந்தவர்கள் மீது வழக்கு, வாகன பறிமுதல், அபராதம் என விதித்தாலும் கட்டுப்படவில்லை. போலீசார் பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தும் திருந்தவில்லை.தற்போது பல இடங்களில் டிரோன் மூலம் கண்காணித்தும் ஒன்று கூடுவதை தவிர்த்ததாக தெரியவில்லை.கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க குடும்பத்தையும் மறந்து இரவு பகல் பாராது போலீசார் பணியாற்றி வருவது போற்றுதலுக்குரியது. வேறு வழியின்றி கடுமையாக நடந்து கொள்ளும் போலீசார் மத்தியிலும் அன்பாக பேசி புரிய வைக்க முடியும் என்பதை நிருபிக்கிறார் காரியாபட்டி எஸ்.ஐ., முருகன். ஆட்டோவில் மைக்செட் கட்டி காலையிலிருந்து இரவு வரை சுற்றிவரும் இவர் கூட்டமாக இருந்தாலோ, தேவை இல்லாமல் சுற்றினாலோ, மாஸ்க் போடாதவர்களிடம் அன்பாக பேசி வெளியில் வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்.பெரும்பாலானவர்களை அடையாளம் கண்டு ஊர் பேரைச்சொல்லி அழைத்து சிரித்த முகத்தோடு பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி பலரையும் கவர்ந்து வருகிறார். இதன் மூலம் எஸ்.ஐ.,முருகன் என்பதைவிட மைக் முருகன் என்றால்தான் தெரியும் வகையில் மக்களிடம் பிரபலமாகி உள்ளார்.முருகன் எஸ்.ஐ.,: கொரோனா வீரியம் தெரியாமல் அறியாமையில் வெளியில் வந்துவிடுகிறார்கள்.மன கஷ்டத்தில் இருக்கும் அவர்களிடம் கடுமையாக நடந்து மேலும் அவர்களை கஷ்டத்தில் தள்ளுவதை விட அன்பாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் அடுத்தமுறை வெளியில் வருவதற்கு யோசிப்பார்கள். ஒரு மாதமாக ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறேன். ஒரு முறை பேசி அனுப்பியவர்கள் இதுவரை என் கண்ணில் பட்டது கிடையாது. அன்பால் சாதிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டு அதை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன், என்றார்.இவரை பாராட்ட 94981 84814.

Related posts

Leave a Comment