தேர்தலில் என்னை தோல்வியடைச்செய்ய சீனா புதிய திட்டம்: அதிபர் டிரம்ப்

அதிபர் தேர்தலில் தன்னை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதற்காகவே சீனா கொரோனா குறித்த தகவல்களை கூற மறுப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.


ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதுவரை அங்கு வைரஸ் தொற்றால் 60,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 10,64,194பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தினம் தோறும் குவியும் நோயாளிகளால் திணறியுள்ள அந்நாட்டு அரசு நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவ சீனா தான் காரணம் எனவும் வைரஸ் தொற்று தொடர்பான சர்வதேச விசாரணையை சீனா மீது நடத்த வேண்டும் என ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். மேலும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தொழில்நுட்பம் தொடர்பான பொருட்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளார். 


இந்நிலையில் அதிபர் தேர்தலில் தன்னை தோல்வியடைய செய்ய வேண்டும் எனபதற்காகவே சீனா கொரோனா குறித்த தகவல்களை கூற மறுப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய குற்றாச்சாட்டு ஒன்றை தற்போது முன்வைத்துள்ளார். அமெரிக்கா, சீனா மீது வைத்துள்ள வர்த்தகம் மற்றும் பிற பிரச்சனைகள் காரணமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளரான ஜோபைடன் வெற்றியடைய வேண்டும் என சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார். தன்னை அதிபர் தேர்தலில் தோல்வியடைய சீனா என்ன வேண்டுமானாலும்  செய்யும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தற்போது சீனா கொரோனாவை கையாள்வதில் எடுத்துவரும் நடவடிக்கைகள் என தெரிவித்தார். மேலும் கொரோனா விவகாரத்தில் சீன அதிகாரிகள் மக்களிடையே தங்களை அப்பாவிகளைப் போல் காட்டிக்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Related posts

Leave a Comment