மாநகராட்சி அதிகாரி உட்பட பலர் பாதிப்பு

சென்னையில், மாநகராட்சி உதவி பொறியாளர் உட்பட, பலருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.கொரோனா தொற்று பரவல், சென்னை மாநகராட்சியில் வேகமாக பரவுகிறது. திருவொற்றியூர் மண்டலத்தில், நேற்று முன்தினம் வரை, கொரோனா தொற்றால், 16 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அத்தியாவசிய பணியாளர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொரோனா பரிசோதனை செய்துக் கொள்கின்றனர். அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் பணியாற்றி வரும், உதவி பொறியாளரான, 51 வயது நபருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.சுகாதார துறை அதிகாரிகள், அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் வசித்த பகுதி, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், அவரே களப்பணியாற்றி உள்ளார். இதன் வாயிலாக தொற்று பரவி இருக்கும் எனக் கூறப்படுகிறது. உதவி பொறியாளர் என்பதால், மண்டல அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

குடும்பத்தினர் மட்டுமின்றி மண்டல அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவருக்கும், பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.மாநகராட்சியில் உதவி பொறியாளர் ஒருவர், தொற்றால் பாதிப்பது இதுவே முதன்முறை என, கூறப்படுகிறது.தவிர, திருவொற்றியூர் தெற்கு மாடவீதியில், தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உறவினரான, 20 வயது ஆண், எண்ணுாரில், மீன்பாடி வண்டி ஓட்டி வரும், 65 வயது முதியவர் என, நேற்று மட்டும், மூன்று பேருக்கு தொற்று உறுதியானது.இதனால், திருவொற்றியூர் மண்டலத்தில், தொற்று பாதித்தவர் எண்ணிக்கை, 19 ஆக உயர்ந்தது.

வளசரவாக்கம் மண்டலத்தில், மாநகராட்சி வெளியிட்ட பட்டியல் படி, நேற்று முன்தினம் வரை, 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று, 20 பேருக்கு, புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில், காரம்பாக்கம், செட்டியார் அகரம், சிங்கார நாயக்கர் தெருவில் உள்ள முதியவர்கள் இல்லத்தில் வசித்து வரும், 85 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர், சில நாட்களுக்கு முன் பேதியால் அவதிப்பட்டார். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.அங்கு, மூதாட்டிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், நேற்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதியோர் இல்லத்தில் வசித்து வரும், 30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல், நெற்குன்றத்தில், கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கடை நடத்தி வரும், 36 வயது நபருக்கும், காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும், 35 வயது நபருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும், மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., காலனியை சேர்ந்த, 32 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர், கோயம்பேடு மார்க்கெட் வெங்காய மண்டியில், காசாளராக பணி புரிந்து வருகிறார்.

இதில், காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வரும், 34 வயது நபரின் மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.இதில், அவரது மகனுக்கும், மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இருந்தும் அவரையும் மருத்துவமனை கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து, வளசரவாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, 60 ஆக உயர்ந்துள்ளது.

செவிலியர் குடும்பம்

கோடம்பக்கம் மண்டலத்தில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 102 ஆக உயர்ந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட, கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியரின் குடும்பத்தை சேர்ந்த, ஐந்து பேர் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண் உட்பட, ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைபோல், அசோக் நகர், புதுாரை சேர்ந்த இரண்டு பேருக்கு, கொரோனா உறுதியானது. இவர்கள், ஊரடங்கால் வேலை இல்லாத காரணத்தால், கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறி வாங்கி வியாபாரம் செய்துள்ளனர்.மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, சாலிகிராமம், மஜீத் நகரைச் சேர்ந்த கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளியின் மகனுக்கும் மகளுக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, நேற்று கோடம்பாக்கம் மண்டலத்தில், 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை, 120 ஆக உயர்ந்துள்ளது.

ஆயுதப்படை காவலர்

ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த, 23 வயது ஆயுதப்படை காவலர், தண்டையார்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.இவருக்கு, நேற்று முன்தினம் இரவு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.இதையடுத்து அவர், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் உட்பட, மேலும் சிலர் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்தனர்.

காய்கறி வியாபாரி

சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 196 மற்றும் 199 ஆகிய வார்டுகளில், 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு, ஏப்., 1ம் தேதி தொற்று தெரியவந்தது.ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்; மற்றொருவர், டில்லி மாநாடு சென்று திரும்பியவர். இருவரும், சிகிச்சை முடிந்து, 15 நாட்களுக்கு முன் வீடு திரும்பினர். ஒரு மாதமாக, மண்டலத்தில் யாருக்கும் புதிதாக தொற்று பாதிக்கவில்லை.

இந்நிலையில், ஏப்., 28ம் தேதி, 196வது வார்டு, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த, 26 வயது நபருக்கு, அடையாறில் விபத்து ஏற்பட்டது.இதில், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு முன், பரிசோதனை செய்யப் பட்டது. இதில், கொரோனா பாதிப்பு தெரிந்தது. இவர், ஈஞ்சம்பாக்கத்தில் தெருத்தெருவாக காய்கறி விற்று வந்தார்.

இதற்காக, தினமும் கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்துள்ளார். அங்கிருந்து, இவருக்கு கொரோனா பாதித்துள்ளதாக தெரிய வருகிறது.இதையடுத்து, இவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர், வசிக்கும் பகுதி, ‘சீல்’ வைக்கப்பட்டு, சுகாதார நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.ஒரு மாதத்திற்குபின், ஒருவருக்கு கொரோனா பாதித்ததால், சோழிங்கநல்லுார் மண்டலத்தில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மருந்தாளுனர் குடும்பம்

மெரினா, நொச்சி நகரில் சென்னை மாநகராட்சி மருந்தாளுனருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, இரு தினங்களுக்கு முன், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.அவரை தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதில், நேற்று அவரது மனைவி, இரண்டு மகள்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து, மூவரையும் மருத்துவக் குழுவினர் ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மேலும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.

புற்றுநோயாளிக்கு தொற்று

திருப்பூரை சேர்ந்த 45 வயது தனியார் நிறுவன ஊழியர். இவர், அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.ஊரடங்கு காரணமாக, போக்குவரத்து வசதியின்றி, மீண்டும் ஊருக்கு செல்ல முடியவில்லை.அதனால், தன் மனைவியுடன், திருவேற்காடு, புளியம்பேடு கிராமத்தில் உள்ள, அவரது உறவினரின், தனி வீட்டில் தங்கியிருந்தார்.அவருக்கு, இரு தினங்களுக்கு முன் காய்ச்சலால், உடல் நலம் பாதித்தது. இதையடுத்து, வளசரவாக்கத்தில், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். நேற்று, அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து அவர், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவர் இருந்த வீடு, திருவேற்காடு நகராட்சியின் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

தொழிற்சாலைக்கு, ‘சீல்’

அனகாபுத்துாரில், விதிமுறையை மீறி இயங்கிய, ஏற்றுமதி தொழிற்சாலைக்கு, ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க, தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனகாபுத்துார், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள, ஏற்றுமதி தொழிற்சாலை ஒன்று, விதிமுறையை மீறி இயங்கி வந்தது.

இது குறித்து தகவலறிந்த வருவாய் துறையினர், நேற்று முன்தினம், தொழிற்சாலைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, விதிமுறையை மீறி கதவை பூட்டி, உள்ளே ஊழியர்கள் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அத்தொழிற்சாலைக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கர்ப்பிணிக்கு தொற்று

குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்த, 24 வயது கர்ப்பிணி ஒருவர், இரும்புலியூரில் உள்ள தன் தாய் வீட்டிற்கு, சில தினங்களுக்கு முன், பிரசவத்திற்காக வந்துள்ளார்.அவருக்கு, நேற்று முன்தினம், ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டதில், நேற்று, கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதேபோல், ராஜகீழ்ப்பாக்கம், அன்னை இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த, 34 வயதுடைய நபர், ஆவடி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு, சில தினங்களுக்கு முன், ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டது. நேற்று அவருக்கு, கொரோனா இருப்பது உறுதியானது.மேலும், மேற்கு தாம்பரம், ஸ்ரீனிவாசா தெருவைச் சேர்ந்த, 77 வயது முதியவர், சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற, நேற்று முன்தினம், தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.தற்போது, சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு, அரசு உத்தரவுப்படி, கொரோனா பரிசோதனை செய்யப் படுகிறது.அதன்படி, முதியவரின் ரத்த மாதிரிகள், சோதனைக்கு அனுப்பப்பட்டதில், நேற்று முன்தினம், அவருக்கு, கொரோனா இருப்பது உறுதியானது. பாதிக்கப்பட்ட அனைவரும், மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவருக்கு தொற்று

மணலியில், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட இருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு உள்ளது. மாநகராட்சியின், தொற்று குறைவான மண்டலமாக மணலி இருந்தது.

இந்நிலையில், மணலி, அப்போலோ ஆம்ஸ்ட்ராங் நகரைச் சேர்ந்த, 40 வயது மருத்துவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், நெற்குன்றத்தில் கிளினிக் வைத்து, கோயம்பேடு வியாபரிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.தொடர்ந்து, மணலி சுகாதார துறை அதிகாரிகள், அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனை யில் சேர்த்தனர்.அவர் வசித்த பகுதி முழுதும் கண்காணிப்பு வளைத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment