‘மின் சட்ட திருத்தத்தை தமிழக அரசு ஏற்காது’

சென்னை : ‘மத்திய அரசால் வெளியிடப்பட்டு உள்ள, வரைவு மின்சார சட்ட திருத்தத்தை கைவிட, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என, தமிழக மின் துறை அமைச்சர், தங்கமணி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசு, ‘வரைவு மின்சார சட்ட திருத்தம் – 2020’ குறித்த அறிவிப்பு வெளியிட்டு, அனைத்து மாநிலங்களிடமும் கருத்து கேட்டுள்ளது. அதில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஷரத்துகளை நீக்கும்படி, மத்திய அரசை வலியுறுத்த உள்ளோம்.

ஏற்கனவே, மின் வாரியத்தை, தனியார்மயமாக்க எடுத்த நடவடிக்கையை கைவிடுமாறு, பிரதமருக்கு, தமிழக முதல்வர், 2014ல் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது. கடந்த, 2018 வரைவு சட்ட திருத்தத்தில், நடுத்தர மக்கள் பெறும் மானிய விலை மின்சாரம் மற்றும் விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்திற்கான மானியத்தை, அவர்களின் வங்கிக் கணக்கில், மாநில அரசு நேரடியாக செலுத்துகிறது.

இது போன்ற திருத்தங்களை கைவிட வலியுறுத்தி, அதே ஆண்டு நவம்பர், 12 ம் தேதி, பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். தற்போது, மேற்கூறியவை மட்டும் அல்லாது, புதிய திருத்தமாக, மின் வினியோகத்தை, தனியார் துணை வினியோக உரிமம் பெறுபவர் வாயிலாக மேற்கொள்ளுதல் போன்ற ஷரத்துகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து வரைவு திருத்தங்களும், பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அமைந்துள்ளதால், வரைவு மின்சார சட்ட திருத்தத்தை, மத்திய அரசு கைவிட, தேவையான அனைத்து நடவடிக்கைகளும், தமிழக முதல்வரால் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு, விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்காது. வரைவு மின்சார சட்ட திருத்தம், அமலாக்கத்திற்கு வராதபடி, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment