60% வேட்பாளர்களை அடையாளம் கண்டுகொண்ட ஸ்டாலின்… காணொலி மூலம் மினி பட்டியல் தயார்..

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒராண்டே உள்ள நிலையில் திமுகவில் அறுபது சதவீத வேட்பாளர்கள் அக்கட்சியின் தலைமையால் இப்போதே அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவது, ஒன்றிணைவோம் செயல்திட்டம் மூலம் உதவி செய்வது குறித்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக காணொலிக் காட்சி மூலம் நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அவ்வாறு அவர் ஆலோசனை நடத்தி வரும் சூழலில் பல தொகுதிகளுக்கும் இப்போதே தோராயமாக ஒரு மினி வேட்பாளர் லிஸ்டை ஸ்டாலின் தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

திமுகவினர் உதவி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் திமுகவினர் நிவாரணப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பல பகுதிகளிலும் திமுகவினர் நிவாரண உதவிகள் செய்து அது தொடர்பான தகவல்களை தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று வருகின்றனர். ஒரு சிலரோ காணொலிக் காட்சி மூலம் தாங்கள் செய்த பணிகளை ஸ்டாலினிடமே நேரடியாக தெரிவித்து அவரது பாராட்டையும் பெற்றுள்ளனர்

இன்னும் ஓராண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஓராண்டு மட்டுமே உள்ளதால் அதற்கான பணிகளில் திமுக கவனம் செலுத்தி வருவது அனைவரும் அறிந்தது. இதனிடையே கொரோனா பதற்றம் தணிய இன்னும் குறைந்தது 3 மாதங்களாவது ஆகக்கூடும் என்பதால் வீடியோ கான்பிரன்ஸ் வழியாக கட்சி பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார் ஸ்டாலின். மாவட்டம், நகர, ஒன்றியம் வாரியாக நிர்வாகிகளுடன் உரையாடும் ஸ்டாலின் அப்பகுதி மக்களின் குறைகள், கட்சி மூலம் செய்த உதவிகள் பற்றி குறிப்பெடுத்துக்கொள்கிறார்.

அடையாளம் ஏற்கனவே தனக்கு அறிமுகமான பிரமுகர்களிடம் உரிமையாக பெயர் சொல்லி அழைக்கும் ஸ்டாலின், உங்கள் பகுதியில் மக்கள் மனநிலை எப்படி உள்ளது.. நிவாரண பணி செய்கிறீர்களா..பார்த்துகங்க என தெரிவிக்கிறார். மேலும், ஒரு சில தொகுதிகளுக்கு அந்த தொகுதியை சேர்ந்த இரண்டு மூன்று பேரின் பெயர்களை அவர் குறிப்பெடுத்து வைப்பதாக கூறப்படுகிறது. கடைசி நேர நெருக்கடியை தவிர்ப்பதோடு, தொகுதியில் யாருக்கு நற்பெயர் உள்ளது, செல்வாக்கு உள்ளது என்பதை பற்றி முன்கூட்டியே அறிந்துகொள்ள இது உதவும் என நம்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Leave a Comment