எண்ணிக்கை கூடுவதால் ‘கிடுகிடு’ என அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

சென்னை : ராயபுரம் மண்டலத்தில், கொரோனா பாதிப்பு, 1,000த்தை கடந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அதில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும், 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.பாதிப்பை கட்டுப்படுத்த, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் இடங்களில், ‘ஜிங்க், விட்டமின் சி’ மாத்திரைகளுடன், கபசுர குடிநீர், மூலிகை கஷாயம் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னையில் கொரோனா தீவிரமடைந்து வரும் ராயபுரம் மண்டலத்தில், பாதிப்பு, 1,000த்தை கடந்துள்ளது.அதன்படி, சென்னையில் நேற்று முன்தினம் வரை, 5,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ராயபுரம் மண்டலத்தில் மட்டும், 1,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக, கோடம்பாக்கம் மண்டலத்தில், 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க.நகர் மண்டலத்தில், 737 பேர்; தேனாம்பேட்டை மண்டலத்தில், 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக, ஆலந்துார் மண்டலத்தில், 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ராயபுரம் மண்டலத்தில், குறுகிய சாலை மற்றும் மக்கள் அடர்த்தி காரணமாக பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால், பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாமல் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக, ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர் வீட்டில் இருப்பவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கப்படுகிறது. அவற்றை கட்டுப்படுத்தும் பணி நடைபெறுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Related posts

Leave a Comment