தயார் படுத்தலாமே ; விஷ பூச்சிகளின் புகலிடமாகும் அரசு பள்ளிகள்

காரியாபட்டி : ஊரடங்கால் அரசு பள்ளிகளில் புழக்கம் இல்லாமல் தூசி , குப்பை நிறைந்தும், குடிநீர் தொட்டியில் பாசியும் படிந்துள்ளது. சுகாதாரமில்லாத கழிப்பறைகள், பராமரிப்பின்றி உள்ள வகுப்பறைகளை பராமரிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊரடங்கால் இரு மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் இயங்கவில்லை. அரசு பள்ளிகள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. பள்ளி நாட்களில் கூட விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருக்கும் நிலையில் தற்போது விஷப்பூச்சிகள் அதிகம் குடியிருக்க வாய்ப்புகள் உண்டு. ஜூனில் 10 வகுப்பு தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வுக்கு பின் பள்ளிகள் திறக்கப்படலாம். அப்போது மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும்.

பள்ளிகள் திறப்பு அறிவிக்கும்போது உடனடியாக சீரமைக்க முடியாத நிலை உருவாகும். இதை கருதி தற்போதே பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு பள்ளி வளாகம் ,வகுப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க முயற்சி மேற்கொள்ள பலரும் எதிர்நோக்குகின்றனர்.நீண்ட விடுமுறை என்பதால் பள்ளிகளில் பராமரிப்பு இல்லாமல் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. குடிநீர் தொட்டியை பராமரிப்பது அவசியம்.

திடீரென திறக்கப்பட்டால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுவர். பள்ளிகளை திறக்க அரசு அறிவிக்கும் முன் தற்போதே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெங்கட்ராமன், சமூக ஆர்வலர், மேலக்கள்ளங்குளம்.

Related posts

Leave a Comment