போலி கப சுர குடிநீர் தயாரித்தால் கடும் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன்

கோயம்பேடு : கோயம்பேடு பகுதியில், ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ எனப்படும், கொரோனா தடுப்பு திட்டமாக, 10 நாட்களுக்கு கப சுர குடிநீர் மற்றும் சிறப்பு மூலிகை தேநீர் வழங்கப்பட உள்ளது.

சென்னையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறப்பு மூலிகை தேநீர்இதையடுத்து, சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும், கொரோனாவிற்கு எதிரான சிறப்பு திட்டம், சோதனையாக, கோடம்பாக்கம் மண்டலம், கோயம்பேடு, சேமாத்தம்மன் நகரில் நேற்று துவங்கப்பட்டது.

இதில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ், சித்தா மருத்துவர் வீரபாபு ஆகியோர் பங்கேற்றனர்.இதில், கோயம்பேடு, சேமாத்தம்மன் நகர், சீமாத்தம்மன் கோவில் தெரு, அய்யப்பா நகர் ஆகிய பகுதிகளில், 152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் தொடர்ந்து, 10 நாட்களுக்கு, 25 ஆட்டோக்களில், வீடு வீடாகச் சென்று கப சுர குடிநீர் மற்றும் சிறப்பு மூலிகை தேநீர் வழங்கப்பட உள்ளது.

இப்பகுதியை, கொரோனா தொற்று இல்லாத பகுதியாக மாற்ற முடியும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். நிகழ்ச்சியில், துாய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், கப சுர குடிநீர் வழங்கினார்.

இது குறித்து, சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:சென்னையில், பகுதி வாரியாக திட்டங்கள் வகுத்து, கொரோனா தாக்கத்தை படிப்படியாக குறைத்து வருகிறோம். இதன்படி, கோயம்பேடு பகுதியில், கொரோனா தொற்று அதிகமாக ஏற்பட்ட பகுதியில், வீடு வீடாக ஆட்டோவில், கப சுர குடிநீர், சித்தா மருத்துவர் வீரபாபு தயாரித்த சிறப்பு மூலிகை தேநீர் ஆகியவை வழங்கப்படுகின்றன.

அரசு அங்கீகாரம்

இதன் விளைவாக, 4 — 5 நாட்களில், இப்பகுதியில், கொரோனா தாக்கத்தை குறைக்க திட்டமிட்டுள்ளோம். அரசு அங்கீகாரம் பெற்றவர்களிடம் இருந்து மட்டுமே, கப சுர குடிநீரை பொதுமக்கள் வாங்கி பருக வேண்டும். அரசு அனுமதியின்றி, கப சுர குடிநீர் தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

சித்தா மருத்துவர் வீரபாபு கூறியதாவது:நம் முன்னோர்கள், வீடுகளில் பயன்படுத்தி வந்த மூலிகையான, சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், மஞ்சள், ஓமம், கிராம்பு, கடுக்காய் தோல் ஆகியவை, கொண்ட சிறப்பு மூலிகை தேநீர் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த தேநீர், கோயம்பேடு பகுதியில் வீடு வீடாக வழங்கப்படும். இதனால், இப்பகுதி முழுதும், கொரோனா தொற்றில்லாத பகுதியாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Related posts

Leave a Comment