கொரோனா தொற்று இன்னும் குறையவில்லை: விஜயபாஸ்கர் தகவல்

சென்னை : ”தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் குறையவில்லை; அதிகரிக்க வாய்ப்புள்ளது,” என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை மாநகராட்சியில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, நாளை முதல், 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த காலகட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கொரோனா தடுப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், அம்மா மாளிகையில் நேற்று நடந்தது.


ஆலோசனைக்கு பின், மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் அளித்த பேட்டி:
மண்டல வாரியாக விரிவான ஆய்வுக்கு பின், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னையில், 200 வார்டுகளிலும் தீவிரமாக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, சுகாதாரத்துறை இணைந்து மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன.
அரசு தனது கடமையை செய்து வருகிறது. மக்களும், தங்களது கடமையை செய்து, கொரோனா சங்கிலி தொடரை துண்டிக்க வேண்டும். கொரோனா தொற்று சமூக பரவலாக, மாறாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.


சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ”ஒருநாள் ஏற்றம், இறக்கத்தை வைத்து, கொரோனா பாதிப்பு குறைந்ததாக கூற முடியாது; அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அதிக பரிசோதனை செய்யப்படுகிறது. தொடர்ந்து குறைந்தால் தான், முழுமையாக தொற்று குறைந்ததாக கருத முடியும்,” என்றார்.
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கூறுகையில், ”முழு ஊரடங்குக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்புடன் வீட்டில் இருக்க வேண்டும்,” என்றார்.
ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் காமராஜ், பாண்டியராஜன், அன்பழகன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment