மாஜிஸ்திரேட் பாரதிதாசன்.. மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கு வாழ்த்து.. கமல்ஹாசன்

சென்னை: சாத்தான்குளம் வழக்கில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், “சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக கமல்ஹாசன் சாத்தான்குளம் தொடர்பாக நேற்று வெளியிட்ட ட்விட்டில், CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி என்று கூறியிருந்தார்.

இன்னொரு ட்விட்டில் சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்” என்று கூறியிருந்தார்.

இதனிடையே இதனிடையே இறந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் மோசமான காயங்கள் இருந்ததால், காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் ஒரு நொடிக்கூட வீணாகமல் விசாரணை நடைபெற வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாக கூறிய நீதிபதிகள், அதுவரை நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், இந்த வழக்கின் விசாரணையை இன்றே தொடங்க உத்தரவிட்டனர்.

Related posts

Leave a Comment