பெண்கள்- குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது! – ஸ்டாலின் #JusticeForJayaPriya

சென்னை: அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிரச் செய்கிறது. பெண்கள்- குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது. இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நாகூரான், செல்வி தம்பதியினரின் 7 வயது மகள் நேற்று முதல் காணவில்லை. வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த மகளைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் சிறுமியை தேடிய போலீசார், குளத்தில் ரத்தகாயங்களுடன் சிறுமியின் உடலை கண்டுபிடித்தனர். உடல் முழுவதும் ரத்தகாயங்களும், ஆங்காங்கே ரத்தமும் சிதறிக்கிடந்தது. உடலை மீட்டு காவல்துறையினர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #JusticeForJayaPriya என்ற ஹேஸ்டேக் போட்டு கொதிப்புடன் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு சிறுமி அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கொதிப்பை உருவாக்கியுள்ளது. இந்த கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதேபோல மு.க ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில், கொரோனா பரவலைப் போலவே தமிழகத்தில் சட்டம் – ஒழுங்குச் சீர்கேடும் படுவேகமாகப் பரவி வருவது கவலையடைச் செய்கிறது! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயதுச் சிறுமியின் உடல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், இரத்தக் காயங்களுடன் வறண்ட குளம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. ஜூன் 29ஆம் தேதி மாலையில் விளையாடச் சென்ற சிறுமி, இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவரது பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் தேடியலைந்து ஜூலை 2ஆம் தேதி காலையில் உயிரற்ற உடலினை கண்டெடுத்துள்ளார்கள். ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்புதான், இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்றொரு சிறுமி படுகொலைக்குள்ளானது தாமதமாக வெளியே தெரிய வந்தது. இப்போது மீண்டும் ஒரு சிறுமி! இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. பெண்கள் – சிறுமிகள் – பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறை காட்டிட வேண்டும்; இத்தகைய கொடூரங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment