அகற்றலாமே : ஆக்கிரமிப்பில் கண்மாய் நீர்வழித்தடங்கள் : கட்டடமாக உருமாறுவதால் பெரும் இழப்பு

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டத்தில் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளால் கண்மாய்களுக்கு தண்ணீர் வருவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அதிகாரிகளின் மெத்தனமும் தொடர்வதால் விவசாயிகள் பாதிப்பை சந்திக்கின்றனர்.
வேளாண் சாகுபடி , நிலத்தடி நீருக்கு கண்மாய்கள் மற்றும் குளங்களே ஆதாரமாக உள்ளன. தென்மேற்கு, வடகிழக்கு என பருவமழை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் சிறு ஓடைகள் மூலமாக ஆற்றில் கலந்து அதன் வழியாக கண்மாய்கள் நிரம்புகின்றன. இவை கோடை மழையின்போது உயிர்பெற்று அடுத்த பருவ மழையில் மீண்டும் நிறைந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் இருக்கும்.
தற்போது கண்மாய்களுக்கு நீர் வரும் வழிப்பாதையின் பெரும் பகுதிகள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி உள்ளது. நிரந்தர கட்டடங்கள் உருவாகி உள்ளதுடன் அடுத்தடுத்து புதிய ஆக்கிரமிப்பு முயற்சிகளில் பல்வேறு தரப்பினர் ஈடுபடுகின்றனர். விவசாயிகள் சங்கம் சார்பில் புகார் தெரிவித்தும் பொதுப்பணித்துறையினரின் தகுந்த ஒத்துழைப்பு இல்லாததால் முறைகேடுகள் தொடர்கின்றன .நீர் வரத்து ஓடைகளை முறையாக பராமரித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் முன் வர வேண்டும்.

தேவை நடவடிக்கை

ராஜபாளையம் ,ஸ்ரீவில்லிபுத்துார் பகுதி வழியே செல்லும் 80 அடி அகல காயல்குடி ஆற்றை துார்வார கடந்த 6 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறேன். இதில் அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட சிலர் நிரந்தர குடியிருப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் பல இடங்களில் ஆற்றின் அகலம் 50 அடி குறைந்துள்ளது.

இதே நிலை நீடித்தால் விவசாயத்தை நம்பி உள்ள பலரும் விவசாயத்தை கைவிட்டு செல்லும் நிலை ஏற்படும். மாவட்ட நிர்வாகம் கண்மாய்களை காக்கும் விதமாக நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை எந்த பாரபட்சமின்றி மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்ணன், விவசாயி,ராஜபாளையம்……….

Related posts

Leave a Comment