680 ஐ தாண்டிவிட்டது தொற்று: ஒன்பது நாளில் 441 பேர் பாதிப்பு: விதிகளை பின்பற்றாததால் எகுறுது எண்ணிக்கை

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் கடந்த 9 நாளில் 441பேருக்கு தொற்று பாதிக்க இதன் எண்ணிக்கை 680 ஐ தாண்டி விட்டது . முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறந்துவிட்டதால் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிறது.

மதுரையில் கொரோனா தொற்று இரண்டாயிரத்தை கடந்த நிலையில் அருகில் உள்ள விருதுநகரிலும் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் மக்களோ பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற விதிகளை காற்றில் பறக்கவிட்டப்படி இஷ்டத்துக்கு சுற்றுகின்றனர்.

வங்கிகள் முதல் டீக்கடை வரை கட்டிப்பிடிக்காத குறையாக நெருக்கமாக நின்றப்படி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. இவர்களால் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவோருக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் நேற்று வரை 680க்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 7பேர் பலியாகி உள்ளனர். விருதுநகர் அரசு தலைமை மருத்துவனையில் தினமும் 800 முதல் 1000 பேருக்கு பரிசோதனை நடக்கிறது.

அரசின் பின்பற்றலை முறையாக கடைப்பிடிக்காதே தொற்று உயர்வுக்கு காரணமாகிறது. முகக்கவசம் அணிந்தவர்கள் மற்றொருவருடன் பேசும் போது முகக்கவத்தை அகற்றி விட்டு பேசுவதும் தொடர்கிறது. பேசும் போது வாயில் உள்ள நீர்த்திவலைகள் மற்றவர் மீது சிதறி விழுவதால் தொற்று பரவும் என்ற அடிப்படை கூட தெரியாமல் பலர் இருப்பது வேதனைக்குரியது. இதே நிலை நீடித்தால் சென்னை, மதுரையின் நிலை விருதுநகருக்கும் ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

எப்படித்தான் தடுப்பது*முகக்கவசம் அணியாமல் செல் வோர் மீது ஸ்பாட் பைன் ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இதை உள்ளாட்சி நிர்வாகங்கள் மூழு மூச்சில் செயல்படுத்த வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாாத வங்கி, ஓட்டல்,கடைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* டீ கடை, மளிகை கடை, அலுவலகங்கள், காய்கறி மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்போரை நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். வெறும் எச்சரிக்கையோடு நின்றால் மீண்டும் விதி மீறலுக்கு வழி வகுக்கும்.

* டூவீலரில் ஒருவர் மட்டுமே அனுமதி உள்ள நிலையில் இரண்டு மூன்று பேர் பயணிக்கின்றனர்.இதுபோன்றவற்றை கண்காணித்து போதிய அறிவுரை வழங்க வேண்டும்.

* கார்கள், வேன்,ஆட்டோக்களில் புளி மூட்டை போல் ஆட்களை ஏற்றி செல்வது தொடர்கிறது. விதி மீறும் வாகனங்களை உடனுக்குடன் பறிமுதல் செய்து டிரைவர்களை கைது செய்ய

வேண்டும்.

* அரசு, தனியார் நிறுவனங்களில் கிருமி நாசினி தெளிப்பதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்கள் கைகளை சோப்பு போட்டு கழுவிய பின் அலுவலகம் வருவதை கண்காணிக்க வேண்டும். மீறுவோருக்கு ஸ்பாட் பைன் ரூ.100 விதிக்க வேண்டும்.

*விதிகளை மீறாமல் இருப்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்க வேண்டும். இக்குழுக்கள் மூலம் கண்டிப்பான முறையில் கெடுபிடிகளை கையாண்டால் மட்டுமே சென்னை, மதுரை நிலைமை விருதுநகருக்கு ஏற்படாமல் தடுக்கலாம்.


இன்னுமா திருந்தவில்லை

மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 10, 381 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12, 312 பேர் கைது செய்யப்பட்டனர். 4838 டூவீலர்கள், 84 கார்கள், 112 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள், 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனினும் திருந்தாத உள்ளங்கள் வாகனங்களில் இஷ்டத்துக்கு ஆட்களை ஏற்றி செல்வது தொடரத்தான் செய்கிறது.


ஒத்துழைத்தால் தடுக்கலாம்

தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் முழு கவனம் செலுத்தி வருகிறது. மக்களிடம் போதுமான ஒத்துழைப்பு இல்லை. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்கள், வீடுகளில் சமூக இடைவெளி, சமூக விலகலை பின்பற்ற வேண்டும். பெரியவர்கள் கவனக்குறைவாக இருப்பதால் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை விரட்ட முடியும்.

கண்ணன், -கலெக்டர், விருதுநகர்

தொற்று சதவீதம் அதிகம்

மாவட்டத்தில் ஊரடங்கு துவங்கிய காலத்தில் தொற்று பாதிப்பு 1 சதவீதமாக இருந்தது. தற்போது 4 சதவீதமாக அதிகரித்துள்ளது. 100 பேரில் 4 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. அரசு மருத்துவமனை வருவோர் கைகளை சோப்பு போட்டு கழுவ தேவையான வசதிகள் உள்ளது. ஆனால் வருவோர் யாரும் இதை கடைப்பிடிப்பதில்லை. முகக்கவசத்தைகூட முறையாக அணியாமல் உள்ளனர்.

– டாக்டர். பிரகலாதன், கண்காணிப்பாளர்

அரசு மருத்துவமனை விருதுநகர்

Related posts

Leave a Comment