தொற்று 782; டிஸ்சார்ஜ் 346: பயமுறுத்தும் பரவல்

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று 782 ஆன நிலையில் 346 பேர் டிஸ்சார்ஜ் ஆனது ஓரளவு ஆறுதல் தந்தாலும் பரவலால் உயரும் எண்ணிக்கை பலருக்கும் மன கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் துவக்கத்திலிருந்த வேகத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் .கொரோனா தொற்று துவக்கத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் குறைந்த அளவே இருந்ததால் மாவட்ட மக்கள் ஒருவித மனநிம்மதியடைந்தனர் .மாவட்ட நிர்வாகமும் தடுப்புபணியில் அதிதீவிரமாக செயல்பட்டு கட்டுக்குள் வைத்திருந்தது.இடையில் வெளி மாநில,மாவட்ட மக்கள் இடம் பெயர தொற்று எண்ணிக்கை உயர துவங்கியது.

வெளியிடங்களிலிருந்து வந்தவர்களால் தொற்று அதிகரிப்பதாக நம்மை நாமே சமாதனம் படுத்தி கொண்டோம்.ஆனால் தற்போது பரவல் கட்டுகடங்காமல் செல்கிறது. நேற்று மட்டும் 108 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதன் பரவலால் மக்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு தென்பட துவங்கி விட்டது. இருந்தாலும் பலரது நடவடிக்கையால் தொற்று அதிகரிக்கிறது.

தேவை பழைய முறை:

அரசு கூறும் விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்தாலே பரவலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் ஒரு சிலர் எதையும் கண்டுக்காமல் வலம் வருகின்றனர்.

டூவீலர்கள், ஆட்டோ, வேன்களில் இன்றும் விதிமீறல் தொடர்கிறது. இதில் பயணிக்கும் மக்களும் ஒருவரை ஒருவர் இடித்தப்படி நெருக்கமாக பயணிக்கின்றனர். 10 வயதுக்கு கீழ் 60 வயதுக்கு மேற்பட்டோர் அவசியமற்று வெளியில் வருவதை தவிர்க்க அரசு கூறுகிறது.

இதையும் கூட பலரும் பொருட்படுத்துவதில்லை.அனுமதியுடன் நடக்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கூட சமூகஇடை வெளி காற்றில் பறக்கிறது.இப்படிதான் தொற்று பரவலும் அதிகரிக்கிறது.

துவக்கத்திலிருந்த கிருமி நாசினி தெளிப்பு,கட்டுப்பாடுடன் கூடிய கண்டிப்பு,மாவட்ட எல்கையில் கூடுதல் கண்காணிப்பு,சமூக இடைவெளி பின்பற்றாத கடைகள்,வங்கிகள் ,மார்க்கெட் வியாபாரிகள் மீது நடவடிக்கை ,முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் என பழைய முறையை மாவட்ட நிர்வாகம் முறையாக பின்பற்ற வேண்டும்.இதை செயல்படுத்தினால் மட்டுமே மாவட்டத்தில் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

கண்காணிக்க நடவடிக்கை

முன்பு மாவட்டத்தின் 6 எல்லைகளில் மட்டும் கண்காணிப்பு இருந்தது. தற்போது தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் 16 எல்லைகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜூலை 7ல் ‘மாஸ் க்ளீனிங்’ நடக்க உள்ளது. மக்களும் இக்கட்டான சூழலை உணர்ந்து தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடு விதித்து கொள்ள வேண்டும்.

ஆர். கண்ணன், கலெக்டர்

Related posts

Leave a Comment