சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்படுவதாகவும், அன்றைய தினம் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் சிறப்பு பூஜைகள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள்.

மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியையொட்டி தலா 3 நாள், பிரதோஷத்துக்கு ஒரு நாள் என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உள்ளதால் பக்தர்கள் யாரும் தற்போது அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களிலும் அனுமதிக்கப்படவில்லை. சதுரகிரி மலைக்கு செல்லும் வழியான தாணிப்பாறை வனத்துறை கேட் மூடப்பட்ட நிலையில் உள்ளது.

வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு உள்ளது. இதற்கிடையே வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மிகவும் விமரிசையாக நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழா நாள் வருகிறது. இந்த திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். ஆடி அமாவாசை திருவிழாவானது ஒரு வாரம் நடைபெறும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்குரிய திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி மற்றும் கோவில் செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி கோவிலில் வருகிற 20-ந் தேதி நடக்க இருந்த ஆடி அமாவாசை திருவிழாவானது, கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகளால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை. எனவே பக்தர்கள் வருகை புரிவதை தவிர்த்து முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment