தரத்துடன் தானிய குலுக்கை : இன்றும் பாதுகாத்து வரும் அதிசயம்

அருப்புக்கோட்டை:தமிழர்களின் பாரம்பரிய கலாசாரம் புகழ் வாய்ந்தது. முன்னோர்கள் செய்த எந்த செயல்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப திட்டமிட்டு அனைத்து செயல்களையும் செய்துள்ளனர்.

அக்காலத்தில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது 10 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர். தாங்கள் விளைவித்த பொருட்களை சமைத்து உண்டு அதை சேமித்தும் வந்துள்ளனர். இக்காலத்தில் ஒரு குடும்பம் அதிகபட்சம் 4 பேர்களுடன் தான் உள்ளன. அவர்களுக்கு தேவையான ஒரு மாதத்திற்கு உண்டான பொருட்களை வாங்கி டப்பாக்களில் வைத்து கொள்வர்.

ஆனால் முன்பு இதுபோன்ற வசதிகள் இல்லை. காலநிலைக்கு ஏற்ப உணவு தானியங்கள் கெட்டு போகாமல் அதிக நாட்களுக்கு பயன்படும் வகையில் சேமித்து வைத்திருந்தனர். இதற்காகதான் ஒவ்வொரு வீட்டிலும் தானிய குலுக்கை என்ற தானிய கிட்டங்கியை வைத்திருந்தனர். 11 அடி உயரம் 3 அடி அலகத்தில் உள்ள இது கம்பு உமி, கரம்பை, சாணம் உட்பட பொருட்களை கொண்டு செய்யப்பட்டவை. நல்ல உறுதியுடன் நீடித்து உழைக்கும்.

இதில் தான் கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை உள்ளிட்ட தானியங்களை சேமித்து நீண்ட காலத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.இந்த தானிய குலுக்கை அருப்புக்கோட்டை அருகே கத்தாளம்பட்டியில் முத்து மாரியம்மாள் என்பவரது வீட்டில் இன்றும் பாதுகாத்து வருகின்றனர்.

முத்துமாரியம்மாள்: எனக்கு தெரிந்த வரையில் 150 ஆண்டுகளுக்கு மேலாக தானிய குலுக்கையை பாதுகாத்து வருகிறோம். தற்போது கூட உடையாமல் உறுதியாக உள்ளது. இன்றைய கால குழந்தைகள் இதை அதிசயத்துடன் பார்க்கின்றனர்,என்றார்.

Related posts

Leave a Comment