15-09-2020 சிவகாசியில் காலண்டர் தயாரிப்பு பணிகள் சுணக்கம்

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி. சிவகாசி என்றால் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். கிழக்காசியாவில் உள்ள ஜப்பானியர்கள் போல இங்குள்ள மக்கள் சுறுசுறுப்பாக இயங்குவதற்கே இந்த பெயர் வர காரணம். அந்த வகையில் சிவகாசியில் பட்டாசு தொழில், அச்சுத் தொழில் உள்ளிட்டவைகள் பிரதனமாகும்.

அச்சுத் தொழிலில் காலண்டர்கள் தயாரிக்கும் பணிகளும் அடங்கும். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் காலண்டர்களுக்கு ஆர்டர்கள் குவியத் தொடங்கும். ஆனால் இந்தாண்டு கொரோனா தாக்கம் காரணமாக அந்த பணிகளும் சுணக்கம் அடைந்துள்ளன.

ஆகஸ்ட் மாதம் முதலே அடுத்த ஆண்டிற்கான காலண்டர்கள் அச்சிடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா ஊரடங்கால் காலண்டர் அச்சடிப்பதற்கான ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை என அங்குள்ள அச்சக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆடிப்பெருக்கு அன்று, தினசரி மற்றும் மாத காலண்டர்களுக்கான மாதிரி ஆல்பங்கள் வெளியிடப்படும். வெளியூர்களிலிருந்து காலண்டர்கள் ஆர்டர்கள் எடுத்துத் தரும் முகவர்கள், ஆல்பங்களை பெற்றுச் சென்று, ஆர்டர்கள் எடுத்து சிவகாசி அச்சகங்களுக்கு அனுப்புவார்கள். இந்த ஆண்டு, தொற்று பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு தினத்தன்று ஆல்பங்கள் வெளியிடப்படவில்லை.

விநாயகர் சதுர்த்தியன்று, சில நிறுவனங்களில் புதுக்கணக்கு ஆரம்பித்து காலண்டர் அச்சடிக்கும் பணிகளை துவக்கினார்கள். இருந்தாலும் இப்போது வரை வெளியூர்களிலிருந்து ஆர்டர்கள் அவ்வளவாக வரவில்லை என கூறுகின்றனர்.

வழக்கமான ஆர்டர்களுடன் ஒப்பிடும் போது, இதுவரை 20% ஆர்டர்கள் மட்டுமே வரத் துவங்கியுள்ளது. தீபாவளி முடிந்த பின்புதான், ஆர்டர்கள் வரும் சூழ்நிலை உள்ளது. மாநிலங்களுக்கு இடையே முழுமையான பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்பதே அச்சக உரிமையாளர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

Related posts

Leave a Comment