என்னுடைய நம்பிக்கைகள் ![]()
1. பெரிய இலக்குகள் நம் வாழ்வின் லட்சியமாக இருந்தாலும், அதை அடைவதற்கு சின்னச் சின்னப் பயிற்சிகள் தேவை. அந்தப் பயிற்சிகளும், அதில் கிடைக்கும் வெற்றிகளும் நம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்; நாம் தவறு செய்யும் தருணங்களை கண்டறிந்து தவிர்க்க உதவும். அதற்கு நீங்கள் முதலில் சிறிய சிறிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு, அதில் வெற்றி பெற வேண்டும். அது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்![]()
2. சிறிய சிறிய நல்ல பழக்கங்கள் பெரும் தாக்கத்தை உண்டாக்கும். அவற்றைத் தொடர்ந்து செய்வதற்கு நம்மைப் பழக்கிக் கொள்ள வேண்டும்![]()
3. 20 முதல் 30 வயது வரை எவ்வளவு திறன்களை கற்றுக்
கொள்கிறீர்களோ, அவை எல்லாம் 35 வயதுக்குப் பின், நீங்கள் தலைமை பொறுப்பிற்கு உரியவர் என்ற தகுதியை உங்களுக்குக் கொடுக்கும்; அதன் பலன்கள் நீங்கள் எதிர்பாராதவகையில் நன்மையைத் தரும்![]()
4. உங்கள் லட்சியமான துறையில் நீங்கள் செய்யும் வேலைக்கு கிடைக்கும் ஆரம்பகட்ட ஊதியம் குறைவாக இருந்தாலும் பராவாயில்லை. அந்த வேலையில் சிறந்த அனுபவத்தைப் பெறுங்கள். அந்த வேலையில் உங்களுக்கு தெரியாத ஏரியாவே கிடையாது என்று வகையில் அனுபவத்தைப் பெறுங்கள். அந்த அனுபவம் சில ஆண்டுகளில் நீங்கள் எதிர்பார்த்த ஊதியத்தைவிட, உயர்வுகளைவிட பல மடங்கு ஊதியத்தையும் உயர்வையும் வழங்கும்![]()
5. இளம் வயதில் நீங்கள் சந்திக்கும் அவமானங்களை துயரமாக, மனச்சோர்வாக மாற்றிக் கொள்ளாதீர்கள். அவற்றை உங்கள் மனதில் வைராக்கியமான நெருப்பாக எரியவிடுங்கள். அது உங்களுக்கு உழைப்பதற்கான ஊக்கத்தைப் பல மடங்கு தரும். வெற்றியின் படிக்கட்டுக்களில் நீங்கள் வேகமாக ஏற முடியும். விரைவில் வெற்றி உங்கள் வசமாகும்![]()
உங்கள் மீதான புறக்கணிப்பால், உங்களுக்கு ஏற்படும் அவமானங்களால், உங்கள் மீது மற்றவர்கள் வீசிய மோசமான வார்த்தைகளால்…உங்களுக்கு ஏற்படும் வைராக்கியம் உயர்வதற்கும், உழைப்பதற்கும் சிறந்த ஆற்றலை கொடுக்கும்![]()
எல்லாவற்றையும் மன்னிக்கலாம்; ஆனால், அவை கற்றுத் தந்த பாடங்களை ஒருநாளும் மறக்கக்கூடாது![]()
6. நீங்கள் ஆளுமைத்திறன் மிக்கவராக, நல்ல லீடராக உங்கள் துறையில் இருக்க விரும்பினால், அதை பள்ளி நாட்கள், கல்லூரி நாட்களிலேயே முயற்சியுங்கள்; செயல்படுத்திப் பாருங்கள். நீங்கள் கல்லூரி முடித்து ஒரு பணியில் சேரும் போது, அது மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும். உங்களைத் தனித்துவம் மிக்கவராக உயர்த்திக் காட்டும்![]()
7. கஷ்டப்படாமல் எதுவுமே கிடைக்காது; அப்படி எதோ ஒன்று கிடைத்தால் அது நிலைக்கவும் நீடிக்கவும் செய்யாது. இது என்னுடைய அனுபவம் மட்டுமல்ல, பிரபஞ்சத்தின் விதியே அதுதான்![]()
8. ஒருவருடைய அழிவில் நம் வளர்ச்சியைத் தேடக் கூடாது. அப்படி நாம் முயன்றால், அது நமது சரிவுக்கும், அழிவுக்கும் நாமே திட்டமிடுவதைப் போன்றது![]()
9. கடும் அழுத்தமே விலைமதிக்க முடியாத வைரத்தை உருவாக்கும். அதே போல் சிக்கலான நேரங்களில், நெருக்கடியான நேரங்களில் நீங்கள் செய்து முடிக்கும் வேலைகளே உங்களுக்கு பாராட்டுக்களையும் உயர்வையும் கொடுக்கும். உங்களைச் சிறந்தவராகக் காட்டும். எல்லாம் சரியாக இருக்கும் போது, சரியான வேலையைச் செய்பவர்கள் சாமானியர்களாகவே இருப்பார்கள். நெருக்கடிகளை சமாளித்து அதை, இயல்பான நிலைக்குக் கொண்டு வருபவர்களே சாதனையாளர்கள்![]()
10. வாழ்வில் எதுவும் எளிதல்ல; ஆனால், அத்தனையும் சாத்தியம் தான்!
நீங்கள் சாத்தியமற்றது என நினைக்கும் ஒன்றை இந்த உலகத்தில் யாரோ ஒருவர் சாத்தியப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.
